சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான பைசன் படம் நாளை, அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு படக்குழு வெளியீட்டு தேதியை தேர்வு செய்துள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாரி செல்வராஜ், “படத்துக்கு ‘பைசன்’ என ஆங்கிலத்தில் பெயர் வைத்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என் திரைக்கதையில் இது ‘காளமாடன்’ என இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் விருப்பப்படி படம் இந்தியா முழுவதும் செல்வதற்காக ஆங்கில தலைப்பை வைத்தோம்” என கூறினார். அவரது நேர்மையான விளக்கம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
அதேவேளை, பா.ரஞ்சித் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கும் அவர், “நிச்சயம் வருவார்; அதற்கான தகுதி அவருக்கு உண்டு” என உறுதியாக பதிலளித்தார். மேலும், தலித் சமூகத்தை மையமாக கொண்ட கதைகளையே ஏன் எடுக்கிறார் என்ற கேள்விக்கு, “தமிழகத்தில் தொடர்ந்து தலித் இலக்கியங்கள், நாவல்கள் வெளிவருகிறது. அதை வெளிப்படுத்துவது குற்றமில்லை; ஆனால் அதையே கேள்வி கேட்பவர்கள் ஏன் இதை மட்டும் குறைகூறுகிறார்கள்?” என பதிலளித்தார்.
மாரி செல்வராஜின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைசன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பிரபலமாகி விட்டன. தீபாவளி வெளியீட்டில் இளம் ஹீரோக்களில் த்ருவ் விக்ரம் முன்னிலையில் நிற்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.