மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனுடன் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் ஹரிஸ் கல்யாணின் டீசல் படங்களும் திரையரங்குகளுக்கு வரவிருக்கின்றன. வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால், கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பைசன் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து துருவ் விக்ரம் பல நேர்காணல்களில் நம்பிக்கையுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவரது தந்தை விக்ரம் கலந்து கொள்ளவில்லை. மகனின் திறமையை தனியாக மக்கள் முன் நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தான் அவர் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. துருவ் தனியாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விக்ரம் பைசன் குறித்து எந்த கருத்தும் வெளியிடவில்லை; பட வெளியீட்டுக்குப் பிறகு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருவ் ஒரு நேர்காணலில், “பைசன் படத்தில் பசுபதி நடித்த கதாபாத்திரத்தில் அப்பா நடிக்கவிருந்தார். ஆனால் நான் தனியாக நிற்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு நாள் அவரை விட்டு பிரிந்து எனது பாதையை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்தது. பைசன் அதற்கான தொடக்கம்” என்று கூறியிருந்தார். இதன் மூலம் தந்தை-மகன் உறவின் பரிமாணம் மீண்டும் ரசிகர்களிடையே பேச்சாகியுள்ளது.
பைசனில் துருவ் விக்ரமுடன் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், லால், ரஜிஷா விஜயன் மற்றும் அமீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தென் தமிழக இளைஞர்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் நவம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.