பா. ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படம், அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வாழை பட வெற்றிக்கு பின், சிக்கலான, கனமான கதையை சொல்லும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இந்த ஆண்டின் தீபாவளிக்கே திரையரங்குகளில் வெளியாகிறது.

மாரி செல்வராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், பைசன் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றும், கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை, தென் தமிழகத்து இளைஞர்களின் போராட்டம், அதோடு தனது அனுபவங்களும் இதில் பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். துருவ் விக்ரம் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ள அவர், பா. ரஞ்சித் மற்றும் முழு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பைசன் படத்தில் துருவ் விக்ரம், முழுக்க கிராமத்து இளைஞராக புதுமையான அவதாரத்தில் நடிக்கிறார். அவருடன் லால், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ராஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கபடியை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், துருவ் விக்ரம் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார். இதுவரை ஸ்டைலிஷ் ஹீரோவாக காட்சியளித்த அவருக்கு, இந்த படம் ஒரு வித்தியாசமான மைல்கல் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ட்யூட், ஹரிஸ் கல்யாணின் டீசல் ஆகிய படங்களும் ரிலீசாக உள்ள நிலையில், பைசன் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், திரையரங்குகளில் படம் பெரும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.