பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எழுத்தாளர் மாரிசெல்வராஜ், அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாமன்னன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை ‘வாழை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். இப்படம் மாரி செல்வராஜின் பேய் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை என்று கூறப்படுகிறது. அந்தச் சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.