சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘பைசன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா, தென் தமிழகம் சார்ந்த சமூக நிஜங்களையும் அரசியல் பிம்பங்களையும் பிரதிபலிக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம், முதல் காட்சியிலேயே பலரிடமிருந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில், “பைசன் படத்தை பார்த்தேன். இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் ஒருமுறை சமூக அரசியலை பேசும் வலுவான படைப்பை உருவாக்கியுள்ளார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம், ஒரு மனிதனின் உறுதியும் உழைப்பும் எப்படி வெற்றியாக மாறுகிறது என்பதை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது. துருவ் விக்ரம் தனது நடிப்பால் கதையின் அரசியல் உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்” என பதிவு செய்துள்ளார்.
அவரது இந்த பதிவை ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் “பைசன் தான் இந்த தீபாவளியின் வின்னர்” என பாராட்டுகின்றனர். இப்படத்தில் துருவ் விக்ரம், அமீர், பசுபதி, லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கபடி வீரரின் போராட்டத்தை மட்டுமல்லாது, சமூக அநீதிக்கும் எதிராக நின்ற ஒரு இளைஞனின் கதையாக பைசன் வடிவெடுத்துள்ளது.
தீபாவளி ரேஸில் பைசன் மட்டுமல்லாமல், டியூட் மற்றும் டீசல் போன்ற படங்களும் திரையரங்குகளை களைகட்ட வைத்துள்ளன. சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள டியூட் காதலும் நகைச்சுவையும் கலந்த படைப்பாக உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாணின் டீசல் பல வருடங்கள் தாமதமாகி வெளியாகியுள்ள நிலையில், தீபாவளி திரைபடப் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுந்து நிற்கிறது.
#