அந்தக் காலக்கட்டத்தில், பிற மொழிப் படங்களின் தாய்நாடாக சென்னை இருந்ததால், தமிழ்-தெலுங்கு, தமிழ்-மலையாளம், தமிழ்-கன்னடம், தமிழ்-தெலுங்கு-கன்னடம் என பல படங்கள் உருவாகின.
இப்படி எடுக்கப்பட்ட பல படங்கள் வசூலையும் கொடுத்துள்ளன. அதில் ஒன்றுதான் ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ படம். நாகேஸ்வரராவ் முக்கிய வேடத்தில் நடித்தார். கதாநாயகி ஜமுனா. கே.சாரங்கபாணி, ராஜசுலோச்சனா, எஸ்.வி.ரங்கராவ், எம்.என்.நம்பியார், டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி உள்ளிட்ட பலர் நடித்தனர்.
பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ்கௌரவராக நடித்தார். கண்டசாலா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ். ‘நீதானே லோகமும் நீதானே சொர்கமும்’, ‘கனிவுதான் பறையோ’, ‘கிருஷ்ணா உனக்கும் பயம்தானா?’, ‘போனா வரது’, ‘கொச்சி மலை கொடகு மலை நாடு’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
பாதாள பைரவி, மாயா பஜார் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய கே.வி.ரெட்டி இயக்கியுள்ளார். ஹாலிவுட்டில் மர்லின் மன்றோ மற்றும் டாம் ஈவெல் நடித்த ‘தி செவன் இயர் இட்ச்’ (1955) படத்தின் உத்வேகத்தில் இதை உருவாக்க நினைத்தார் கே.வி.ரெட்டி.
அன்னபூர்ணா ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக இந்தப் படத்தை எடுக்க விரும்பினார். ஆனால் தயாரிப்பாளர் டி.மதுசூதன ராவ் இந்தக் கதையில் நம்பிக்கை கொள்ளவில்லை.
இதனால் இயக்குனர் கே.வி.ரெட்டி தனது நண்பர்களான பி.எஸ்.ரெட்டி, பட்டபிரம் ரெட்டி ஆகியோருடன் இணைந்து ஜெயந்தி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இது படத்தின் முதல் தயாரிப்பு.
ஹாலிவுட் படத்தின் முக்கியக் கதையை மட்டும் எடுத்து நம்மூருக்குத் தழுவிவிட்டார்கள். இப்படம் தெலுங்கில் ‘பெல்லிநாட்டி பிரமானலு’ என்ற பெயரிலும், தமிழில் ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
தமிழுக்காக சில எழுத்துக்களை மட்டும் மாற்றினார்கள். மிராசுதாருக்கு பிரதாப் என்ற மகனும், ருக்மணி என்ற மகளும் உள்ளனர். பிரதாப்பின் கல்லூரி நண்பன் கிருஷ்ணாவுக்கும் ருக்மணிக்கும் இடையே காதல் மலர்கிறது.
அவர்களுக்கு ஒரு சோசலிஸ்ட் தலைவரால் சீர்திருத்தத் திருமணம் நடத்தப்படுகிறது. தம்பதியருக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு, குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திய பிறகு ராதா கிருஷ்ணனின் அலுவலகத்தில் வேலைக்கு வருவதோடு படம் முடிகிறது. இந்த படத்தில் சீர்திருத்த திருமணம் பற்றிய பேச்சு அந்த காலகட்டத்தில் பரபரப்பானது.