தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் மிஷ்கின், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் அவர் நடித்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மிஷ்கின் தனது இயக்கத்திற்காக திரையுலகில் வலுவான அடிப்படை அமைத்துள்ளார். சித்திரம் பேசுதடி திரைப்படத்திலிருந்து தொடங்கிய அவரது இயக்கம், அஞ்சாதே திரைப்படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்றது. தொடர்ந்து நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு போன்ற படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கினார். இவருடைய படங்கள் பல வெளிநாட்டு படங்களை போன்றே இருக்கும் என்று ஒரு தரப்பினரிடம் விமர்சனங்கள் நிலவினாலும், அவரது ரசிகர்கள் இதை மறுக்கிறார்கள்.
மிஷ்கின் எப்போதும் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. பேரன்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் அளித்த பேச்சு பெரிய விவாதத்திற்குள்ளாகியது. அதேபோல் கொட்டுக்காளி படத்தின் நிகழ்ச்சியில் “நான் நிர்வாணமாக நிற்பேன்” என்று கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாட்டில் ராதா பட விழாவில் குடிப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் பேசியதால் திரையுலகினர் அவருக்கு எதிராக விமர்சித்தனர். பின்னர் பேட் கேர்ள் பட விழாவில், “நான் மன்னிப்பு கேட்டு உங்களை கடவுளாக்குகிறேன்” என்று சொல்லி சென்றார்.
சமீபத்தில் டிராகன் பட விழாவில் “விரைவில் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்” என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால் அப்படம் வெளியானதும், மிஷ்கினின் நடிப்பு படத்திற்கு கூடுதல் புகழைக் கூட்டியது. அவர் நடித்த கதாபாத்திரம் கண்டிப்பான முதல்வராகவும், ஏமாற்றும் மாணவரிடம் கடுமையாக நடந்துகொள்ளும் மனிதராகவும், வேலை இல்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கு பரிவு காட்டும் பாத்திரமாகவும் அமைந்தது.
மிஷ்கின் குறித்து சமீபத்தில் ஓர் அதிசயமான சம்பவம் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படத்தை ரிலீஸிற்கு முன்பே பார்த்த மிஷ்கின், அதன் தரத்திற்கு திரையுலகிலிருந்து பாராட்டு கிடைக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். இதற்காக தனது வசதிக்கேற்ப இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்டோரை அழைத்து, ஒரு ஹாலை வாடகைக்கு எடுத்து விசாரணை திரைப்படத்தை திரையிட்டு பாராட்டும்படி ஏற்பாடு செய்தார். ஆனால் அந்நிகழ்ச்சியை நடத்த தன்னிடம் போதிய பணமில்லாததால், மிஷ்கின் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.
இந்த தகவலை இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இது அவரது திரைப்பற்றையும், நல்ல படங்களை ஆதரிக்கும் மனநிலையையும் காட்டுகிறது.