மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் பிருத்விராஜ். இதில் டோவினோ தாமஸ், விவேக் ஓபராய், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கு ‘எல் 2: எம்புரான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பிருத்விராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் 27-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது மோகன்லால், “இந்தப் படத்தின் கதையை மூன்று படங்களாக எடுக்க முடிவு செய்தோம். ‘லூசிஃபர்’ வெற்றிக்குப் பிறகு ‘எம்புரான்’ படத்தைத் தயாரித்துள்ளோம். அடுத்து ஒரு படம் இருக்கும். இப்படி ஒரு பிரமாண்ட படம் தேவை என்பதால் தயாரித்துள்ளோம்.

ஒரு பொழுதுபோக்குப் படம் எடுப்பது மிகவும் கடினம். நல்ல நடிப்பு, நல்ல இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் நன்றாக இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்கு படம் சரியாக வெளிவரும். அதற்காக நானும் பிருத்விராஜும் இணைந்து கடுமையாக உழைத்தோம். கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் இந்த படம் டிக்கெட் முன்பதிவுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் இந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் ‘லூசிபர்’. இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். நிறைய வேலையாட்கள் உழைத்திருக்கிறார்கள்,” என்றார். பிருத்விராஜ், மஞ்சு வாரியர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.