மலையாள திரைப்பட நடிகர் சங்க அம்மா அமைப்பின் தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. பழைய செயற்குழுவே தொடர வேண்டும் என முன்னாள் துணைத் தலைவர் ஜெயன் செர்தலா கூறியிருந்தார். நடிகர் சுரேஷ் கோபியும் இதையே கூறியுள்ளார்.
ஆனால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு, மலையாளத் திரையுலகம் பாலியல் புகார்களால் சர்ச்சையில் சிக்கியது. இதன் அடிப்படையில் பலர் ‘அம்மா’ அமைப்பை விமர்சித்தனர். இதனால் இந்த அமைப்பின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளை ஏற்க மாட்டேன் என மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அனைத்து நடிகர்களும் ஒன்றிணைவது அம்மா அமைப்பு. அவர்களில் ஒருவர் மீது புகார் வந்தால் ஒட்டுமொத்த அம்மா அமைப்பையும் குறை சொல்ல முடியாது என்றும் மோகன்லால் கூறியுள்ளார். இதனால் அம்மா அமைப்பின் தலைவராக புதியவர் பதவியேற்கும் சூழல் உருவாகியுள்ளது.
முன்னதாக, மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வெளியான பிறகு பல நடிகைகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியது நினைவுகூரத்தக்கது.