இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டராக சிறந்து விளங்கிய யுவராஜ், அந்த வெற்றிக்கு முதன்மைக் காரணமாக இருந்தார். உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த அவர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நோக்கில் மெதுவாகச் சென்றார். தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பாலிவுட்டில் டி சீரிஸின் கீழ் பூஷன் குமார் தயாரிக்கிறார். இவருடன் இணைந்து ரவி பக்சந்த்கா தயாரிக்கிறார்.
தனது வாழ்க்கை வரலாறு குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், “பூஷன் மற்றும் ரவி ஆகிய இரு தயாரிப்பாளர்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான எனது ரசிகர்களுக்கு எனது கதையை வெளிப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.
“என் வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும், கிரிக்கெட் எனது மிகப்பெரிய பலமாகவும், நான் விரும்பும் ஒன்றாகவும் இருந்தது. இந்த படம் மற்றவர்களின் போராட்டங்களை முறியடித்து மீண்டும் எழுச்சி பெறவும், அவர்களின் அசைக்க முடியாத கனவுகளை ஆர்வத்துடன் தொடரவும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.