2022 ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு, தமிழ் சினிமா ஒரு முக்கிய சாதனையைச் செய்துள்ளது. ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு சிறந்த நடனத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடனத்திற்கான தேசிய விருது.
தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டில் தொடங்கி சிறந்த நடனத்திற்கான விருது வழங்கப்படுகிறது. இதுவரை 31 ஆண்டுகளில் ஐந்து முறை மட்டுமே இந்த விருது தமிழ் சினிமாவிற்கு வழங்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டில் ‘திருடா திருடா’ படத்திற்கு சுந்தரம் மாஸ்டர் விருதைப் பெற்றார். 1996 ஆம் ஆண்டு ‘மின்சார கனவு’ படத்தில் பிரபுதேவா இரண்டாவது முறையாக விருதைப் பெற்றார்.
2005 ஆம் ஆண்டு ‘சிருங்காரம்’ படத்திற்கு சரோஜ் கான் இந்த விருதைப் பெற்றார். 2010 ஆம் ஆண்டில் ‘ஆடுகளம்’ படத்தில் தினேஷ், 2012 ஆம் ஆண்டில் ‘விஸ்வரூபம்’ படத்தில் பிர்ஜு மகாராஜ் ஆகியோர் விருதுகளை பெற்றனர்.
இப்போது, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக ஜானி மற்றும் ‘தாய்க்கிழவி’ பாடலுக்காக சதீஷ் கிருஷ்ணன் இவ்விருதுகளை பெற்றுள்ளனர். இந்த இரண்டு பாடல்களும் வெவ்வேறு வகைகளில் படமாக்கப்பட்டுள்ளன. ‘மேகம் கருக்காதா’ பாடலின் நடனம் அதன் மெல்லிசைத் தன்மையில் அமைந்தது. அதேபோல ‘தாய்க் கிழவி’ பாடலுக்கான நடனமும் பயங்கர நடனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.