சென்னை: இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலிருந்து, குபேரா மற்றும் தற்போது வெளியாகியுள்ள இட்லி கடை வரை, தனுஷ் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார். ஆயுத பூஜை தினத்தில் திரையரங்குகளில் வெளியாகிய இட்லி கடை பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் அடுத்தடுத்த படியாக, அடுத்த மாதமே தனுஷ் நடித்துள்ள புதிய இந்தி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ள தேரே இஷ்க் மே படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சங்கர் மற்றும் முக்தி எனும் காதல் ஜோடியின் வாழ்க்கை மற்றும் பிரச்னைகளை மையப்படுத்தி கதை அமைந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தனுஷ் காசியில் அப்பாவின் இறுதி சடங்கிற்காக செல்கிறார் என்ற காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. க்ரித்தி சனோன் தமிழிலேயே ட்வீட் செய்து டீசரை வெளியிட்டது, தமிழக ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள், படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஞ்சனா போலவே இந்த படம் ஹிந்தி சினிமாவில் தனுஷுக்கு இன்னொரு வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 28ம் தேதி தேரே இஷ்க் மே உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த காலத்தில் இட்லி வாங்க காசு இல்லாமல் இருந்த தனுஷ், இன்று கோடிக்கணக்கான பட்ஜெட்டில் படங்களை இயக்கி நடிக்கிறார் என்பது அவரின் உழைப்பையும் வெற்றியையும் காட்டுகிறது. இட்லி கடை நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேரே இஷ்க் மே தனுஷின் இந்தி மார்க்கெட்டில் வெற்றிப் பயணத்தை மேலும் வலுப்படுத்துமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.