நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘நீயா நானா’யில் கலந்துகொண்ட சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்களின் கதைகளைப் பார்த்து உதவியுள்ளனர். ஆகஸ்ட் 25 அன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், படித்துக் கொண்டு வேலை செய்யும் சிறுவர்களின் வாழ்க்கைக் கதைகள் பலரையும் நெகிழ வைத்தன.
கோவில்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்ற சிறுவன், பள்ளியில் படிக்கும் நேரத்தில் பழமுதுக்களைத் தூக்கி, பெற்றோருக்கு உதவுவதாகப் பேசிய காணொலி, சமூக ஊடகங்களில் தீயாய் பரவியது. “பள்ளி மற்றும் வேலையை முடித்தபின் 3 கிலோ மீட்டர் நடந்தே செல்வேன். அம்மா எலும்புத் தேய்மான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவருக்கு நல்ல மெத்தை வாங்கித் தர வேண்டும்” என ரமேஷ் கூறியிருந்தார்.
இந்தக் காணொலியைக் கண்ட இசையமைப்பாளர் தமன், “இந்தச் சிறுவனுக்கு ஒரு இரு சக்கர வாகனம் வாங்கித் தருவேன். இது அவருக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என கூறினார். அதன் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சி அந்தச் சிறுவனின் குடும்பத்திற்கு மளிகை, காய்கறிகள், மெத்தை, ரூ.25,000 பணம் மற்றும் பள்ளி, கல்லூரி படிப்புச் செலவுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் சிறுவனின் அம்மா, “எங்கள் காணொலியைப் பார்த்து உடனே உதவிய விஜய் மற்றும் தமன் ஆகியோருக்கு நன்றி. ‘தமிழக வெற்றிக் கழகம்’ கோவில்பட்டி சட்டமன்ற நிர்வாகிகளுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.