மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியானது மற்றும் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக ஓடிவருகிறது. இப்போது, இந்த படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள மாநில பாஜக நிர்வாகி விஜேஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கேரள உயர்நீதிமன்றம் விடுமுறையில் இருந்ததால், அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தபோது, ‘இந்த படத்தால் ஏற்பட்ட வன்முறை, காவல்துறையின் எஃப் ஐ ஆர் எதுவும் இருக்கிறதா? இது தணிக்கையால் சான்றளிக்கப்பட்ட படம்தானே?’ என்று பல கேள்விகள் எழுப்பி, ‘இது சம்மந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று கூறியது.
இந்த படத்திற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் முல்லை பெரியாறு அணையைப் பற்றிய சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது, இதனால் தமிழக அரசியல்வாதிகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ‘முல்லை பெரியாறு பற்றிய படத்தில் இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. சென்சாரில் நீக்கப்படவில்லை. நமது கவனத்துக்கு வந்ததால் அதை நீக்கியுள்ளோம்’ என்று விளக்கமளித்தார்.