சென்னை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) தலைவர் டாக்டர் ராமதாஸ். அரசியல் ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் சமூகநீதிக்கான போராட்டங்களால் தமிழக அரசியலில் தனித்த இடத்தைப் பிடித்தவர். இன்று அவரது 87வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, குடும்ப மற்றும் சமூகவியல் திரைப்படங்களில் தனிப்பட்ட அடையாளம் கொண்ட இயக்குநர் சேரன் இயக்குகிறார். ராமதாஸ் கதாபாத்திரத்தில் ‘நெட்டி’ நடிப்புக்காக புகழ்பெற்ற நடிகர் ஆரி நடிக்கிறார். இப்படத்தை தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு பா.ம.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க, கடந்த 36 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தனது தாக்கத்தை காட்டி வருகிறது. வன்னியர் சமூகத்துக்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்காக வலியுறுத்திய போராட்டங்கள், நிழல் நிதி அறிக்கைகள், வேளாண் திட்டங்களை முன்னிறுத்தும் முயற்சிகள் என அனைத்தும் இந்த படத்தில் பிரதிபலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் சமகால அரசியலைவும் தொட்டுப் பேசுமா என்ற கேள்வியும் இணையவாசிகள் மத்தியில் எழுந்து வருகிறது. குறிப்பாக, “தேர்தல் அரசியலில் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்” என்ற ராமதாஸின் கடந்த கால கருத்துகள், இப்போது அவரின் மகனும் மருமகளும் அரசியலில் இருப்பது என உள்ள சர்ச்சைகளும் இப்படத்தில் இடம்பெறுமா என்பது கொஞ்சம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.