சென்னை: அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எம்.பி., கனிமொழி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான (2025) 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில், அஜித்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர்களில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் இதற்கு முன்பு பத்ம பூஷண் விருது பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து அஜித்குமார் இந்த முறை பத்ம பூஷண் விருது வென்றுள்ளார்.
இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவரான, திரு. அஜித் குமார் அவர்கள், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது பெற்றமைக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாட்டிலிருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி செட்டியார், ஷோபனா சந்திரகுமார் மற்றும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் குருவாயூர் துரை, தாமோதரன், லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எ.டி. ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எம்.பி. கனிமொழி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.