விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் குடும்ப பின்னணியில் எழுதப்பட்ட உணர்வுப்பூர்வமான கதைமொழியால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களின் பாராட்டும், விமர்சனங்களின் நேர்மறையான எதிர்வினைகளும் இந்தப் படத்தை வசூலில் முன்னணி படங்களின் வரிசையில் நிறுத்தியுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘தலைவன் தலைவி’, நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துடன் ஒப்பிடக்கூடிய வகையில் வசூலுக்குள் புகுந்திருக்கிறது. வெறும் மூன்று நாட்களில் ரூ.25 கோடி இந்திய வசூலையும், ரூ.10 கோடி வெளிநாட்டு வசூலையும் சாதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக விரைவில் ரூ.50 கோடி எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஷேசமாக, கடந்த சில மாதங்களாக விஜய் சேதுபதிக்கு ஹிட் படம் இல்லாத சூழலில், இப்படம் அவருக்கான வெற்றிக்கொடி ஆக அமைந்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம், கணவன்-மனைவி உறவுக்குள் ஏற்படும் மனநிலை, பிரிவுகள் மற்றும் புரிதல்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. யோகி பாபு, சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தில் உள்ள பாசம் மற்றும் உணர்ச்சிகளானது பெரும்பான்மையோரின் வாழ்கையை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. இதனால் பெரிய ரசிகர் கூட்டம் திரையரங்குகளில் வந்து கொண்டே உள்ளது.
மே மாதத்தில் வெளிவந்த ‘ஏஸ்’ படத் தோல்வியுக்குப் பிறகு விஜய் சேதுபதி தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார். அதேபோல் வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள ‘மாரீசன்’ போன்ற திரைப்படங்கள் வசூலில் சரிவாக இருப்பதால், ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றி பெரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. தற்போது படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடும் நிலையில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.