சென்னை: ‘பேரடாக்ஸ்’ என்ற தலைப்பில் உருவான உளவியல் சார்ந்த இந்த குறும்படம் தற்போது திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இதில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் மிஷா கோஷல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தின் டிரெய்லரை இயக்குநர் சேரன், சசிகுமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.
பேரடாக்ஸ் குறும்படத்தின் கதை ஒரு சாதாரண குடும்ப நாயகனை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர் மெதுவாக தனது மனைவியையும், குடும்பத்தையும் விட்டுப் பிரிகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. அதன்பின்னர் அவனது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் இப்படத்தின் கதைக்களம். மனித உளவியல் பரிணாமங்களை உருக்கமாக சித்தரிக்கும் விதத்தில் இப்படம் அமைந்துள்ளது. இயக்குநர் பிரியா கார்த்திகேயன் இதை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார்.
இந்த குறும்படத்திற்கு இசையமைப்பாளராக கே எஸ் சுந்தரமூர்த்தி பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவில் ஃபைசல் வி காலித், படத்தொகுப்பில் ஹரிபிரகாஷ், ஒலி வடிவமைப்பு மற்றும் கலரிங் பணிகளில் கலைஞர்கள் குழுமமாக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், இயக்குநர் சேரன், இப்படத்திற்கு ஒரு பாடலை எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பாகும். முன்னதாக பல துணை வேடங்களில் நடித்த மிஷா கோஷல், இந்த குறும்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
சினிமா வட்டாரத்தில் பாரடாக்ஸ் குறும்படம் ஒரு புதிய முயற்சியாக பாராட்டப்படுகிறது. மனித மனச்சுழற்சி மற்றும் உளவியல் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த குறும்படம் உருவாகியிருப்பது, தமிழ் குறும்பட உலகில் வித்தியாசமான முயற்சியாகும். எதிர்காலத்தில் இதுபோன்ற சிந்தனைத் தூண்டும் குறும்படங்களுக்கு அதிக இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.