மும்பை: சித்தாந்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் இணைந்து நடித்த பரம் சுந்தரி படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் பாடல்கள் வெளியாகிய உடனேயே நல்ல வரவேற்பைப் பெற்றன. வெளியான பின் ரசிகர்கள் சிலர் பாராட்டியதோடு, விமர்சகர்கள் கலவையான கருத்துக்களை வெளியிட்டனர். குறிப்பாக சில காட்சிகள் தனித்தனியாக சிறப்பாக இருந்தாலும், திரைக்கதையில் சரியாக ஒட்டவில்லை என்றார்கள். ஆனால் பின்னணி இசை மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், முதல் நாளில் ரூ.7.25 கோடி வசூலித்ததாக சாக் நிக் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது நாளில் படம் இன்னும் சிறப்பாக செயல்பட்டு ரூ.9 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.16.5 கோடி வசூலித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வசூலைக் கணக்கில் எடுத்தால், படம் தற்போது ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை வசூலித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் தினமும் வசூல் வளர்ச்சியைக் கண்டுவருவது, படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்கள் தியேட்டர்களில் ஆரவாரம் செய்து வரவேற்கும் சூழலில், படம் தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.