தென்னிந்திய சினிமாவில் இருந்து அரசியலுக்குள் வந்த நடிகர்கள் குறைவல்ல. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோரின் வழியில் சமீபத்தில் விஜயும் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளார். இதே நேரத்தில் ஆந்திராவின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், விஜய்க்கு தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தனது கட்சி நிகழ்ச்சியில் விஜயின் கட்சி துண்டை தோளில் அணிந்து, TVK கொடியை கையில் ஏந்தி மேடையில் நின்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பவன் கல்யாணின் இந்த நடவடிக்கை, இரண்டு மாநிலங்களின் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்படுகிறது. ஆந்திராவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது உண்மை. அதனால் இந்த ஆதரவு எதிர்காலத்தில் வாக்குகளாக மாறுமா என்பது கேள்வியாகிறது. அதேபோல் பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் உண்டு. எனவே, இந்த நட்பு இரு தரப்புக்கும் அரசியல் பலன்களைத் தருமா என்பது குறித்தும் விவாதம் அதிகரித்துள்ளது.
விஜய் தனது கட்சியை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் இரண்டு பெரிய மாநாடுகளை மட்டுமே நடத்தியுள்ளார். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் ஈரோடு இடைத்தேர்தலில் அவரது கட்சி களமிறங்கவில்லை. மாநாடுகளில் அவர் அரசியல் கொள்கைகள் அல்லது தீர்க்கமான கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், அவர் 2026இல் திமுக மற்றும் தனது கட்சி இடையே போட்டியே இருக்கும் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் பவன் கல்யாணின் பாசமான ஆதரவு விஜய்க்கு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், விஜயின் அடுத்தடுத்த முடிவுகள் மற்றும் பவன் கல்யாணுடன் அவர் கொள்ளும் நட்பு, இரு மாநில அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தப்போவதாக தெரிகிறது.