சென்னை: நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு இராவண கோட்டம்’ தயாரிப்பாளர் கண்ணன் ரவி நிதி உதவி செய்துள்ளார்.
2013ஆம் ஆண்டு ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்த விக்ரம் சுகுமாரன், தன்னுடைய சிறந்த படைப்பால் கவனம் ஈர்த்தார். இதனையடுத்து, நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு, ‘இராவணக்கோட்டம்’ படத்தை இயக்கியிருந்தார்.
இந்த சூழலில் நெஞ்சு வலி ஏற்பட்டு விக்ரம் சுகுமாரன் உயிரிழிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு இரவு பஸ் ஏறும்போது நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உயிரிழந்தார்.
மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் வசித்துவருகின்றனர். ஒரு சிறந்த திரைப்பட கலைஞனின் இறப்பு தமிழக் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சூழலில் உயிரிழந்த விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார் ‘இராவண கோட்டம்’ தயாரிப்பாளர் கண்ணன் ரவி.
விக்ரம் சுகுமாரன் தாயாரிடம் காசோலையை வழங்கினார் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி. காசோலையை வழங்கிய போது நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர்.