தளபதி விஜய் தற்போது இயக்குநர் ஹெச். வினோத் தலைமையில் உருவாகும் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துவர, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக படப்பிடிப்பு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற செய்தி வெளியாகியதால், ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் நடித்த பழைய படங்களில் ஒன்றான சச்சின் ரீரிலீஸாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ரீரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. வெற்றி பெற்றதோடு சேர்ந்து, வெளியான போது பெரிய வரவேற்பு பெறாத சில படங்களும் தற்போது திரும்ப ரிலீஸாகி நல்ல வசூலைப் பெற்றிருக்கின்றன.
அதற்கான உதாரணமாக 3, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் தற்போது மீண்டும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. அதேபோல், கடந்த வருடம் ரீரிலீஸான விஜய்யின் கில்லி திரைப்படம், தமிழ் சினிமாவின் மிக அதிக வசூல் பெற்ற ரீரிலீஸ் படமாக மாறியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு சச்சின் படமும் ரீரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சச்சின் ரீரிலீஸுக்கு எதிர்மறை வரவேற்பு இருப்பதாக இணையத்தில் பரவிய வதந்திகள், விஜய் ரசிகர்களை கவலையடைய வைத்திருந்தன. ஆனால் இவற்றிற்கு முற்றுப்புள்ளியாக, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, சச்சின் ரீரிலீஸால் படத்திற்கு பத்து மடங்கு லாபம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், ரீரிலீஸில் படம் ஐம்பது முதல் நூறு நாட்கள் வரை ஓடும் எனத் தெரிவித்தார். அதற்காக வெகு விரைவில் ஒரு விழா நடத்தப்படும் என்றும், அந்த விழாவில் படத்தில் பணியாற்றிய அனைவரும் கவுரவிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியால், சச்சின் ரீரிலீஸ் ஒரு பெரும் வெற்றி என்பதை உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. இது விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படம் வெளியாவும் வரைக்கும், ரீரிலீஸ் வெற்றிகள் இந்தக் காத்திருக்கையை இன்னும் சிறப்பாக்கும் என்பதில் சந்தேகமில்லை