தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, ‘வெற்றி கொள்கை திருவிழா‘ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் விஜய் பேசிய பேச்சுக்கு விமர்சனங்களும் ஆதரவும் குவிந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அறிவிப்பு விவாதத்தை கிளப்பியுள்ளது.
தவெக மாநாடு மற்றும் விஜய்யின் பேச்சு குறித்து நடிகையும் பாஜக உறுப்பினருமான ராதிகா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “விஜய்க்கு எனது வாழ்த்துகள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தனது கொள்கைகளை முன்வைத்து வருகிறார். அதையும் மீறி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அரசியலுக்கு வர நினைத்தது ஆச்சரியமாக இருந்தது. விஜய்யை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். பிஜேபிக்கு எதிராக பேசும் முன் கொஞ்சம் யோசிப்பார் என நினைக்கிறேன்.
அதிமுகவை ஏன் தாக்கவில்லை என்று தெரியவில்லை. ஏனென்றால் விஜய் அரசியலை வேறு விதமாக பார்க்கிறார். அவரை ஹீரோவாக்க எஸ்.ஏ.சி எவ்வளவு தியாகம் செய்தார் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பெரிய ஹீரோ ஆன பிறகு அவருடன் ‘தெறி’ படத்தில் நடித்தேன். அவர் அதிகம் பேசமாட்டார். அவர் எப்போதும் அமைதியாக இருப்பார்.
திடீரென்று இந்தப் பரிமாணத்தில் பார்த்தபோது வேறு விஜய்யைப் பார்த்தது போல் இருந்தது. மாநாட்டையும் தன் படங்களைப் போலவே ஒன் மேன் ஷோவாகக் காட்டியிருக்கிறார். அவங்க கட்சிக்காரர்களை அடையாளம் கண்டுபிடிச்சு என்ன செய்யப் போறார்னு பார்ப்போம்” என்றார் ராதிகா.