சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெளியாகி பத்து நாட்கள் கடந்துவிட்டது. விமர்சன ரீதியாக கலவையான மதிப்பீடுகளை பெற்றாலும், வசூல் ரீதியாக படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. உலகளவில் 450 கோடியைத் தாண்டியுள்ள இப்படம் விரைவில் 500 கோடி வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன், கூலி படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்த்தின் பெர்சனாலிட்டி மற்றும் அவரது “மனசாட்சி”தான் காரணம் என கூறியுள்ளார். “ரஜினி போன்ற ஒரு மனிதரை யாராலும் வெறுக்க முடியாது. அவரிடம் பழகியவர்கள் அனைவரும் அவரை நேசித்தே தீருவார்கள். ஒருபோதும் அவர் தன்னை பெரியவர் என காட்டிக்கொண்டதில்லை, தன்னைப்பற்றி பெருமையாகப் பேசியதுமில்லை” என்று தனஞ்சயன் பாராட்டியுள்ளார்.
மேலும், “இது ரஜினியின் திரையுலகப் பயணத்தின் 50வது வருடம். இதை கொண்டாடலாம் என பலரும் கேட்டபோதும், ரஜினி அதற்கு அனுமதி தரவில்லை. எனக்கு நடிப்பதே பிடிக்கும்; அதனால் தொடர்ந்து நடிக்கிறேன், அதை பெரிதாக யாரும் கொண்டாட வேண்டாம் என அவர் கூறியுள்ளார். இப்படிப்பட்ட மனம் கொண்டவருக்கு வெற்றிகள் தானாகவே வந்து சேரும்” என்று தனஞ்சயன் கூறியுள்ளார்.
அதேபோல், “கூலி படத்தில் வேறு யாரேனும் நடித்திருந்தால், இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபின் இத்தனை பெரிய வசூல் பெற்றிருக்காது. ஆனால் ரஜினி நடித்ததால் தான் இப்படம் விமர்சனங்களை மீறி 500 கோடியை எட்டும் நிலையில் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தனஞ்சயனின் இந்த பாராட்டுக்களை வைரலாக்கி வருகின்றனர். விமர்சனங்களை மீறியும் ‘கூலி’ வசூல் ரீதியாக வரலாற்று வெற்றி பெற்றிருப்பது, சூப்பர் ஸ்டாரின் அசைக்க முடியாத தனிப்பட்ட கவர்ச்சி மற்றும் அவரது ரசிகர்களின் உறுதியான ஆதரவு காரணமே என ரசிகர்கள் பெருமையாகக் கூறுகின்றனர்.