சல்மான் கான் நடிக்கும் அட்லீ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இப்படத்தின் கதையை ‘மகதீரா’ பாணியில் அட்லீ எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிகழ்காலம், அரசர் காலம் என்பது போல் கதை எழுதியிருக்கிறார். மறுபிறவி எடுப்பது போல் திரைக்கதை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சல்மான் கானுடன் நடிக்க ரஜினி அல்லது கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சல்மான் கானுடன் இரண்டு நடிகர்களில் ஒருவரை கண்டிப்பாக நடிக்க வைப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறார் அட்லீ. இந்த வருட இறுதிக்குள் படத்தில் நடிக்கும் நடிகர்களை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். 2025 கோடை விடுமுறையில் படப்பிடிப்பை தொடங்கி 2026-ல் வெளியிடும் திட்டம் இருப்பதாக தெரிகிறது.
இதை வைத்து நடிகர்களை முடிவு செய்து படப்பிடிப்பிற்கான முதற்கட்ட பணிகளை அட்லீ தொடங்குவார். இதில் இதுவரை திரையுலகில் இல்லாத உலகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். இதற்காக பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் இந்திய திரையுலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது.