தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். 1975ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தனித்துவமான நடிப்பு, தனக்கே உரிய ஸ்டைல் மற்றும் மக்களை கவரும் குணாதிசயங்களால் ரசிகர்களின் இதயத்தில் நிலைத்த இடம் பிடித்தார். கருப்பு நிறத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, சாதாரண மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்ற உணர்வை தமிழ்நாடு கொண்டாடியது. அன்றிலிருந்து இன்று வரை அவரின் பிரபலத்துக்கும் பெருமைக்கும் குறைவில்லை.

கலைப்புலி எஸ். தாணுவின் சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிகாந்தை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு சென்றது. நடிகராக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர், கதை ஆசிரியர், விநியோகஸ்தர் என பல துறைகளில் தன்னை வெளிப்படுத்தியவர். தனது 50 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் 171 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது ஜெயிலர் 2 எனும் தனது 172வது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில், திரைத்துறை சார்பில் ரஜினிகாந்துக்காக பாராட்டு விழா நடத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது. பல சவால்களை எதிர்கொண்டு, இடைவெளிகளை கடந்து, மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் அனுபவக் குதிரையாக அவர் தொடர்ந்ததால், இந்த 50 ஆண்டு பயணம் மிகப்பெரிய சாதனையாகும். “ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு” என்ற உவமை, அவரது உழைப்பின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.
இப்போது நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், “சினிமா உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்வது சாதாரண விஷயம் அல்ல. தலைவருக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அதன் பின் முழு உறுதிப்பாட்டுடன் விழா நடத்தப்படும்” என்று அறிவித்துள்ளார். மேலும், தனது 48வது பிறந்த நாளையும் நிச்சயதார்த்தத்தையும் கொண்டாடிய புதுமாப்பிள்ளை விஷால், ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.