ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது ஆனைகட்டி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளிலும் நடைபெற்றது. சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் ரஜினிகாந்தும் பங்கேற்றார்.

இன்று சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங் நடந்து வருகிறது என்றும், படப்பிடிப்பு டிசம்பரில் முடிவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். இதே பேச்சு இணையத்தில் பரவி, ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ படமும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்தப் படம் ரஜினியின் 171-வது படமாகும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ரஜினி, ‘படம் நல்லா வந்திருக்கு’ என கூறியதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, யோகி பாபு உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த பலரும் மீண்டும் இணைந்துள்ளனர். மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் இந்த பாகத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் ‘ஜெயிலர் 2’வில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
2023-ல் வெளிவந்த முதல் பாகமான ‘ஜெயிலர்’ உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியே இரண்டாம் பாகத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. தற்போது இரண்டாவதும், மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகமுமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.