சென்னை: கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் பற்றி கருத்து தெரிவித்தபோது, அவரது வழுக்கைத் தலையை குறிப்பிடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் முதலில் ஃபஹத் பாசிலை வில்லன் வேடத்தில் நடிக்க திட்டமிட்டதாகவும், அவர் கிடைக்காததால் சௌபினை தேர்வு செய்ததாகவும் ரஜினி கூறினார். மேலும், வழுக்கையாக இருப்பதால் அந்த வேடத்திற்கு பொருந்துவாரா என லோகேஷிடம் சந்தேகம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

சௌபின் அதனை நிகழ்ச்சியில் கைதட்டி வரவேற்றாலும், சமூக வலைதளங்களில் இது பாடி ஷேமிங் என விமர்சனம் எழுந்தது. குறிப்பாக பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “சௌபின் விக் இல்லாமல் நடிக்கிறார், ஆனால் நீங்கள் எப்போதும் டோப்பா வைத்துதான் நடிக்கிறீர்கள்” என கூறினார். மேலும், சௌபின் நடிப்பு திறமையை பாராட்டி, அவர் தலைமுடியை அல்லாது தனது திறமையையே நம்பி இந்தியாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் என்று கூறினார்.
இந்த விமர்சனத்துடன், ரஜினி தனது நண்பரின் மகள் சுருதிஹாசனை கவர்ச்சி நடிகை என குறிப்பிட்டது பற்றியும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூலி படத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்த பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வரும் ஆகஸ்ட் 14 அன்று கூலி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. படத்தின் பிரம்மாண்ட விளம்பர நிகழ்ச்சிகளின் நடுவே இந்த சர்ச்சை, ரசிகர்களும் விமர்சகர்களும் கவனத்தை ஈர்த்துள்ளது.