சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலவையான நிலையை சந்தித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், ரஜினியின் 171-வது படமாகும். அனிருத் இசையமைத்த இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வெளியாவதற்கு முன்பே, கூலி ரூ.1000 கோடிகளை வசூலிக்கும் என பேசப்பட்டது. ஆனால் திரைக்கதை மற்றும் கதையமைப்பு குறித்து வந்த விமர்சனங்கள், ரசிகர்களின் உற்சாகத்தை குறைத்துவிட்டன.

வெளியான முதல் நான்கு நாட்களில் முன்பதிவு வசூல் மூலம் படம் ரூ.404 கோடிகளை குவித்தது. குறிப்பாக முதல் நாளில் ரூ.151 கோடி வசூல் செய்து, தமிழ் சினிமாவில் முதல்நாள் அதிக வசூல் சாதனையைப் படைத்தது. எனினும், அதன் பின் படத்தின் முன்னேற்றம் மந்தமாக மாறியது.
சாக்நிக் வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 9 நாட்களில் இந்திய அளவில் கூலி சுமார் ரூ.235.5 கோடிகளை வசூலித்துள்ளது. 10வது நாளான ஆகஸ்ட் 23-ம் தேதி மட்டும் படம் ரூ.10 கோடிகளை வசூலித்திருக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் முதல் 10 நாட்களில் இந்தியாவில் படத்தின் மொத்த வசூல் சுமார் ரூ.245.5 கோடிகளாகும்.
வார நாட்களில் குறைந்த வசூல் இருந்தாலும், வார இறுதியில் கூலி மீண்டும் சற்றே மவுசைப் பிடித்திருக்கிறது. எனினும், ரசிகர்களின் ஆரம்பக் கனவான 1000 கோடி வசூல் சாத்தியமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், இந்த ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் திரை வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார். அவரது சினிமா பயணத்தை கொண்டாடிய இந்த காலகட்டத்தில் வெளியான கூலி படத்துக்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் படம் வழங்கிய ஏமாற்றம், ரஜினியின் பொற்காலம் குறித்த ரசிகர்களின் உற்சாகத்தை சற்றே குறைத்துள்ளது.