நடிகர் யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக மட்டுமல்ல, ஹீரோவாகவும் பரவலாக அறியப்படுகிறார். லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமாகிய அவர், வெள்ளித்திரைக்கு வந்தபோது ஆரம்பத்தில் குறைவான வாய்ப்புகளையே பெற்றார். ஆனால் யாமிருக்க பயமேன் படத்தில் நடித்ததன் மூலம் அவரது தனித்துவமான ஹாவரால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.

அந்த படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் அதிகமாகி, அவரது டைமிங் மற்றும் கவுண்டர்களால் ரசிகர்களை ரசிக்க வைத்தார். வடிவேலு, விவேக், சந்தானம் என முன்னணி காமெடியன்கள் ஒதுங்கிய நிலையில், யோகிபாபு அந்த இடத்தை வெற்றிகரமாக பிடித்தார். தொடர்ந்து கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தவர், விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றார்.
ஹீரோவாக மாறிய பிறகும், காமெடியை விடாமல் தொடர்ந்து பிசியாக செயல்பட்ட யோகிபாபு, மாவீரன், ஜெயிலர், அரண்மனை 4, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். சமீபத்தில் அவர் ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து பேசினார்.
“தர்பார் படத்திலிருந்து ரஜினியுடன் பணியாற்றுகிறேன். நாங்கள் ஒரு சூட்டிங்கில் இருந்தபோது ரஜினி அண்ணா வந்து, ‘கோலமாவு கோகிலா’ படத்தை நானே நாலு முறை பார்த்தேன்’ என்று சொன்னார். அவருக்கு அந்த படம் ரொம்பவே பிடித்திருக்கிறது. அதேபோல் ‘மண்டேலா’ படம் பார்த்து ரசித்தார். ஆனால் சில படங்களைப் பார்த்து, ‘அப்படி இருந்துச்சு’ என்று சொல்லுவார். உடனே எனக்கு ‘ஐயயோ, ரஜினி காறி துப்பிட்டாரே’ என்று தோன்றும்,” என அவர் உருக்கமாக கூறினார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகிபாபுவின் தனித்துவம் மற்றும் எளிமையான பேச்சு ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.