சென்னை: விதார்த் நடித்த “மருதம்” திரைப்படம் விவசாய நிலத்தின் அவசியத்தை வலியுறுத்தும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இயக்குநர் வி. கஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

படம் குறித்து நடிகர் விதார்த், “நானும் உங்களுடன் சேர்ந்து படம் பார்த்தேன். மிகவும் நன்றாக வந்துள்ளது. நாயகியான ரக்ஷனா சிறப்பாக நடித்திருக்கிறார். சிறுவனாக நடித்த பையனும் பிரமாதமாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளரின் பாடல்கள் படத்திற்கு வலு சேர்த்துள்ளன” என பாராட்டினார். இயக்குநர் கஜேந்திரன், “ராணிப்பேட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவத்தைக் கூறும் கதை இது. என் நண்பனுக்கு நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவானது” என்றார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், “முதல் படத்திலேயே தாயாக நடித்துவிட்டால், அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்குமா?” என நாயகி ரக்ஷனாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ரக்ஷனா, “நான் ஏற்கனவே இரண்டாவது படத்தில் நடித்து விட்டேன், அந்த இயக்குநர் இப்படி கேட்கவே இல்லை” என பதிலடி கொடுத்தார்.
இதற்குப் பின் ரங்கநாதன், “ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படித் தான் நடித்ததால் வாய்ப்பு இல்லை” எனக் கூற, ரக்ஷனா உடனே, “ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார், அதனால் தான் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது உங்களுக்கு தெரியுமா? அவர் சினிமாவில் தனி இடம் பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தால் தொடர்ந்து அதே கதாபாத்திரம் செய்வார்கள் என்ற சட்டம் யார் போட்டது? அந்த சட்டத்தை யாராவது உடைக்க வேண்டும்; அதை நான் தான் செய்கிறேன்” என கூர்மையான பதில் அளித்தார்.