புதுடெல்லி: 1993-ம் ஆண்டு ஜப்பானிய-இந்திய அனிமேஷன் திரைப்படம் “ராமாயணம்: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” இந்தியாவில் அக்டோபர் 18 அன்று வெளியிடப்படுகிறது.
இயக்குனர்கள் யுகோ சகோ, ராம் மோகன் மற்றும் கொய்ச்சி சசகி இயக்கிய இந்த அனிமேஷன் திரைப்படம் முதன்முறையாக இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் 4K வடிவில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த அனிமேஷன் ராமாயணம் ஏற்கனவே 2000-ம் ஆண்டு இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து படத்தை இந்திய திரையரங்குகளில் வெளியிடுவதற்கான விநியோக உரிமையை பெற்றுள்ளன.
கீக் பிக்சர்ஸ் இந்தியாவின் இணை நிறுவனர் அர்ஜூன் அகர்வால் கூறியதாவது: ராமாயணம் அனிமேஷன் படமாக உருவாக்கப்படுவது இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய முயற்சியாகும்.
காலத்தின் காவியமான ராமனைப் பற்றிய இந்த புதுமையான மற்றும் துடிப்பான திரைப்படம் அனைத்து பகுதிகளிலும் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், இந்த அனிமேஷன் படமான ராமாயணத்திலும் பங்களித்துள்ளார்.