சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கு இடையில் நடைபெறும் விவாகரத்து விவகாரம் தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு இருவரும் பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்ததிலிருந்து, இது தொடர்ச்சியாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, ரவி மோகன் கெனிஷா என்பவருடன் திருமணம் செய்யும் தோணியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், கடந்த ஒரு வருடமாக தனது மௌனத்தை பேணிவந்தது குழந்தைகளுக்காக என்றும், தனக்கே எதிராக எத்தனையோ குற்றச்சாட்டுகள், பழிசொற்கள் வந்தபோதிலும், அதை ஏற்று சுமந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
தனது நிம்மதிக்காக அல்ல, குழந்தைகளின் நிம்மதிக்காகவே தன்னை அமைதிக்குள் தள்ளியதாகவும், எதையும் வெளியில் பேசாமல் இருந்தது தன் பலவீனம் அல்ல என்று அவர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், “தன்னிடம் இருந்து ஒரு மனிதன் மட்டும் இல்லை, அவர் பொறுப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டார்” என்ற வரிகள் மிகவும் தாக்கத்துடன் இருந்தன.
விவாகரத்து வழக்கில், மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்திருப்பதும் தற்போது பேசப்படுகின்றது. இதனிடையே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சில வரிகள் — “என்னை சுற்றி அனைத்தும் வளர்ந்துகொண்டிருக்கின்றன, அதனால் நானும் வளர்கிறேன்”, “அமைதிக்கு சத்தம் தேவையில்லை” என்ற வார்த்தைகள் — ஆர்த்தியின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
இவை அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சிலர் ஆர்த்தியின் மனநிலைக்கு ஆதரவு தெரிவிக்க, மற்றவர்கள் இவ்வாறான நேரத்தில் இப்படி பதிவிடுவதன் நோக்கம் என்னவென கேள்வி எழுப்பி வருகின்றனர்.