சென்னை: தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்ததிலிருந்து அடிக்கடி ஊடகச் செய்திகளில் இடம் பெறும் நடிகர் ரவி மோகன், மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாடகியும் நெருங்கிய தோழியுமான கெனிஷாவுடன் வெளியே செல்வது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், தற்போது அவர் வைத்திருக்கும் சொகுசு பங்களா தொடர்பான விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.

ரவி மோகனின் சொகுசு பங்களா சென்னை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ளது. அந்த வீட்டை வங்கியில் கடன் மூலம் வாங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த பத்து மாதங்களாக அவர் தவணை கட்டணம் செலுத்தவில்லை என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அந்த பங்களாவுக்கு வங்கி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ரவி மோகன், கடந்த ஆண்டு தனது பெயரை மாற்றிக்கொண்டார். மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிந்த பிறகு, அவர் “ஜெயம் ரவி” என அறியப்பட்ட பெயரை விட்டு “ரவி மோகன்” எனத் தனக்கென புதிய பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த மாற்றத்திற்குப் பின்னர், அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவரத் தொடங்கின.
இந்நிலையில், ரவி மோகன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கராத்தே பாபு மற்றும் ஜீன் படங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக கராத்தே பாபு படத்தின் டீசர் வெளியாகியதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பங்களா ஜப்தி பிரச்சாரம், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மீண்டும் தலைப்புச் செய்தியாக மாற்றி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.