சென்னை: தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், கட்டா குஸ்தி போன்ற பல ஹிட் படங்களில் காமெடியில் கலக்கியவர் ரெடின் கிங்ஸ்லி. திரையுலகில் மட்டும் அல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வரும் ரெடின், அண்மையில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள தகவலும் ரசிகர்களிடையே பரவியுள்ளது.
தொழில் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூலமாக இவர் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் தலைமைச் செயலகத்துக்கு பூங்கொத்து வாங்கி வந்ததைக் கண்டவர்கள் சிலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அந்த நேரத்தில் திமுக வேட்பாளர்கள் வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மநீம வேட்பாளர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் ரெடின் கிங்ஸ்லி கமல்ஹாசனை சந்திக்க வந்தாரா என கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கான விளக்கம் ரெடினிடம் இருந்து வந்தது. திமுக வேட்பாளராக போட்டியிடும் பி. வில்சன் தான் தனது வழக்கறிஞராக இருப்பவர் என்றும், அவருக்கு வாழ்த்து சொல்லவே தாமாகவே வந்ததாகவும் கூறினார். வில்சன் குடும்ப உறுப்பினரைப் போலவே நெருக்கம் உள்ளவர் என்றும், அவரது வெற்றி தனது சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கமல்ஹாசன் சார் சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்று மாநிலங்களவை உறுப்பினராக மாறும் தருணம் ஒரு ரசிகனாக தனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். தலைமைச் செயலகத்தில் அவர் வந்ததும் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டதும் கவனத்தை பெற்றது.
தொழில், குடும்பம், அரசியல் சம்பந்தப்பட்ட உறவுகள் என ரெடின் கிங்ஸ்லியின் பலதரப்பட்ட வாழ்க்கைச்சூழ்நிலை தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.