சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான வடிவுக்கரசி, ஏராளமான திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற “தமிழ் பேஷன் சகா” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதால், திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

வடிவுக்கரசி கூறியதாவது, “இப்போது ஒருவரிடம் ஒரு லட்சம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள், இன்னொருவரிடம் 10 லட்சம் பாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில், ரீல்ஸ் செய்பவர்களை சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். ஆனால், அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் வந்து டயலாக்கு பேசும்போது திணறி நிற்கிறார்கள். இது படக்குழுவின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறது. இன்னொரு புறம், உண்மையான திறமை கொண்ட நடிகர்கள் வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், “ரீல்ஸ் என்பது பொழுதுபோக்குக்கான விஷயம், அதை சினிமாவோடு ஒப்பிடக்கூடாது. ஐந்து வெற்றிப் படங்களை கொடுத்தாலும், ஒரு தோல்விப் படம் வந்தால், அந்த நடிகருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்கு பாடுபட வேண்டும். இப்படி இருக்கும் நிலையில், ரீல்ஸ் செய்யும் ஒருவரை நடிக்க வைக்கும்போது, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பது கடினமாகும். எனவே, ரீல்ஸ் என்பதை ரசித்தோமா, ரசிக்கவிட்டோமா என்பதிலேயே முடிக்க வேண்டும்” என்றார்.
அப்போது, அவர் பழைய காலத்துடன் ஒப்பிட்டு, “முன்பு நடிகர்கள் படம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, போட்டோ ஆல்பத்தை ஏந்திக்கொண்டு, தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்பார்கள். நாடகங்களில் நடித்து, பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். ஆனால் இப்போது, ரீல்ஸ் மூலம் ஒரே கணத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. நான் இதை தவறாக கூறவில்லை, ஆனால் நடிப்பு ஒரு பொழுதுபோக்காக அல்ல, முழுமையான அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும். வேலைக்கு சென்று நடிப்பது போல், சீரியலில் நடிப்பதும் கவனத்துடன் செய்யப்பட வேண்டும்” என்றார்.
மேலும், பெண்களின் உடை குறித்த கேள்விக்கு பதிலளித்த வடிவுக்கரசி, “இன்றைய மாணவர்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு நாம் எதையும் சொல்லித் தர தேவையில்லை. இருந்தாலும், பெற்றோர்கள் சில விஷயங்களை எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக, பெண்கள் ஆடை தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பார்த்து அருவருக்கும் வகையிலோ, கைத்தட்டி அழைக்கும் வகையிலோ இருக்கக் கூடாது. நம்மைப் பார்த்து யாரும் கும்பிடவில்லை என்றாலும், நம்மை பார்த்து ‘நல்ல குடும்ப பெண்’ என்று நினைக்கும் அளவிற்கு ஆடை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
வடிவுக்கரசி, ஆபாசமான உடை அணிந்து, பிறர் ஆசையை தூண்டிவிட்டு, பின்னர் அவர்களது செயல்களை குற்றமாக கூறுவதில் எந்த நியாயமும் இல்லை என கண்டனம் தெரிவித்தார்.