கேரளா: மோகன்லாலின் “லூசிபர்” படம் ரீ-ரிலீஸாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற ‘லூசிபர்’ திரைப்படம் மார்ச் 20ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளது. பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய முதல் படம் ‘லூசிபர்’. இந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி பல மொழிகளில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
200 கோடியைத் தாண்டி வசூல் செய்த இந்தப் படம் மலையாள திரையுலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்பட்டது. அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார். மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம்தான் 150 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.
அந்த சாதனையை, படம் வெளியான 25 நாட்களுக்கு உள்ளாகவே முறியடித்தது ‘லூசிபர்’ அரசியல் நிறைந்த திரில்லரான ‘லூசிபர்’ படத்தில் மோகன்லாலுடன் மஞ்சுவாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய், சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன், பாலா உள்பட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். சிறப்பு தோற்றத்தில் நடிகர் பிருத்விராஜூம் நடித்திருந்தார்.
முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.’எம்புரான்’ திரைப்படம் வருகிற மார்ச் 27 அன்று வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகமான ‘லூசிபர்’ திரைப்படத்தை மார்ச் 20 அன்று ரீ-ரிலீஸாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.