சென்னை: இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ரிதம் திரைப்படம், இன்று 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அர்ஜுன், மீனா, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத ஃபீல் குட் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு தனிச்சுவை சேர்த்தன. “நதியே நதியே”, “காற்றே என் வாசல் வந்தாய்” போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் இதயத்தில் நிற்கின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து.

படம் வெளியிட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து, “காலம் கடந்தும் ரிதம் பாடல்கள் கொண்டாடப்படுவதைப் புன்னகையோடு பார்க்கிறேன். நல்ல பாடல்கள் தேனைப்போல; கெட்டுப் போவதில்லை. படம் மறந்தாலும் பாடல்கள் மறக்கப்படமாட்டாது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள், “இந்தப் பாடல்கள் எப்போதும் உயிரோடு இருக்கும். கவி ஆற்றல் கொண்ட வைரமுத்து சோழர் காலத்தில் பிறந்திருந்தால், தஞ்சை மண்ணையே எழுதி வைத்திருப்பார்” என்று பாராட்டியுள்ளனர். 25 ஆண்டுகள் கடந்தபோதும் ரிதம் பாடல்கள் தமிழ் சினிமாவின் அன்பு நினைவுகளில் இன்னமும் பசுமையாகத் திகழ்கின்றன.