தமிழ் சினிமா நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த ரோபோ சங்கரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று, தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல்வேறு கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை வெளிப்படுத்திய அவர், குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு அவரை துரத்தியது. அதிக மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் சிகிச்சை பெற்று ஒரு கட்டத்தில் அந்த பழக்கத்தையே நிறுத்தியதாகவும் அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார். குடும்பத்தினரின் நிம்மதிக்கும் அது காரணமாக இருந்தது. ஆனாலும், சமீபத்தில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் தனுஷும், சிவகார்த்திகேயனும் அவருக்கு பலமுறை “இப்படி செய்யாதீங்க” எனக் குடி பழக்கத்தை விட்டுவிடச் சொன்னதாக பத்திரிகையாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தனுஷ், சங்கருக்கு மருத்துவச் செலவுக்காக உதவியிருந்ததோடு, அவர் மீண்டும் ஆரோக்கியமாக திரையுலகில் சாதிக்க வேண்டும் என விரும்பியிருந்தார். ஆனால் சங்கரின் மறைவு, அவர்களின் நம்பிக்கையையே சிதறடித்தது.
சங்கரின் உடலுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நாளை பேரனின் காதுகுத்த விழாவை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்தது, குடும்பத்தினரின் துயரை இன்னும் அதிகரித்துள்ளது. ரோபோ சங்கரின் மறைவு, ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறைக்கும் ஒரு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.