கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ கடந்த ஆகஸ்டில் திரையரங்குகளில் வெளியானது. இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமாக உருவான இந்த படம், வெளியான முதல் வாரத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. டொமினிக் அருண் இயக்கிய இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களையும் சாதனையான வசூலையும் ஒரே நேரத்தில் பெற்றது. மலையாள திரையுலகில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, 19 நாட்களில் ரூ. 250 கோடியை கடந்த வசூலை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது ரூ. 300 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிய ‘லோகா’ ரசிகர்களிடையே ஓடிடி வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக நான்கு வார இடைவெளிக்குப் பிறகு படங்கள் ஓடிடியில் வெளியாகும் என்றாலும், லோகாவின் வெற்றி காரணமாக அதன் வெளியீடு தாமதமானது. தற்போது படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பில், படம் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேதி குறித்த தகவல் வெளிவராத நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டொமினிக் அருண் இயக்கிய இந்த ஃபேண்டஸி படம், அமானுஷ்ய சக்தி கொண்ட பெண்ணின் கதையை மையமாகக் கொண்டது. மலையாள நாட்டுப் புராணக் கதாபாத்திரமான ‘கள்ளியங்காடு நீலி’ பாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட இந்த கதையில் கல்யாணி பிரியதர்ஷன் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், நஸ்லீன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். சாண்டி மாஸ்டர் வில்லனாக நடித்திருந்தது ரசிகர்களிடையே பேசுபொருளானது.
இப்போது லோகா படத்தின் வெற்றி காரணமாக, தயாரிப்பாளர் துல்கர் சல்மான் அடுத்த பாகங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இரண்டாவது பாகத்தில் துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லோகா யூனிவர்ஸில் மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள சினிமாவின் புதிய காலத்தை ஆரம்பித்த ‘லோகா’ தற்போது ஓடிடி உலகிலும் அதே வெற்றியைப் பதிவு செய்யப்போகிறது.