ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள “காந்தாரா சாப்டர் 1” கடந்த அக்டோபர் 2 அன்று வெளியானது. ருக்மினி வசந்த், ஜெய்ராம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், துவக்கத்திலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன் கதை, திரைக்கதை, மற்றும் வன தெய்வத்தின் வழிபாட்டு காட்சிகள் ரசிகர்களை கவர்ந்ததால், படம் வெற்றியை நோக்கி வேகமாக பயணிக்கிறது.
விடுமுறை நாட்களில் வெளியான இப்படம் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையால் பெரிய அளவில் திரையரங்குகளில் ரசிகர்களை குவித்தது. படத்தின் சி.ஜி. தொழில்நுட்பம், பின்னணி இசை, மற்றும் காட்சிப்பதிவு ஆகியவை பாராட்டுக்குரியவையாக அமைந்துள்ளன. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படம் குறித்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸ் தகவல்படி, படம் இந்தியாவில் மட்டும் ஆறு நாட்களில் ரூ.290.25 கோடிகள் வசூலித்துள்ளது. வெளிநாட்டு வசூலை சேர்த்து பார்த்தால், மொத்தம் ரூ.400 கோடிகளை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் ரூ.33.5 கோடிகள் வரை வசூலித்தது, காந்தாராவை ஆண்டு சிறந்த படங்களின் பட்டியலில் இணைத்துள்ளது.
வசூல் வேகம் குறையாமல் தொடர்வதால், படம் விரைவில் ரூ.600 முதல் ரூ.700 கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வட்டாரங்கள் இந்த படம் 1000 கோடி கிளப்பில் இடம் பிடிக்கும் என்றும் கணிக்கின்றன. ரிஷப் ஷெட்டியின் இந்த வெற்றி, தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.