பாடகர்கள் திப்பு – ஹரிணியின் மகனான சாய் அபயங்கர், தமிழ் இசைத்துறையில் ‘கட்சி சேர’, ‘ஆசை கூட’ பாடல்களால் பிரபலமானவர். சமீபத்தில் வெளியான ‘சித்திர புத்திரி’ ஆல்பமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இளம் வயதிலேயே பல பெரிய தயாரிப்பாளர்கள், முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.
தமிழில் ‘டூட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாய், சிம்புவின் அடுத்த படத்தில், சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தில், மேலும் அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் பிரமாண்ட திட்டத்திலும் பணியாற்றி வருகிறார். அதோடு, லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்திலும் இசையமைக்கிறார்.

20 வயதான சாய் அபயங்கர், மலையாள சினிமாவில் ‘பல்டி’ என்ற கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா படத்திற்கும் இசையமைத்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தில் ஷேன் நிகாம் ஹீரோவாகவும், சாந்தனு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இன்று திரையரங்குகளில் படம் வெளியானது.
இந்த ‘பல்டி’ படத்திற்காக சாய் அபயங்கருக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், மலையாள சினிமா வரலாற்றில் முதல் படத்திலேயே அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். பல ஆண்டுகளாக இயங்கி வரும் முன்னணி இசையமைப்பாளர்களும் பெறாத அளவுக்கு சம்பளத்தை, சாய் அபயங்கர் தனது முதல்படத்திலேயே பெற்றிருப்பது தொழில்துறையில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.