சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி. பாலாஜி, நடிகர் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்ற ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடல் திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட பாடலில் உள்ள ஆட்சேபனைக்குரிய வரிகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், பாடல் இசை ‘மியூட்’ செய்யப்படும் என்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்தது.

இதைத் தொடர்ந்து, மனுதாரர் பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதையும், இசை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நேற்று வரை ஒத்திவைத்தனர். இந்த நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காலையில் படத்தைப் பார்த்தபோது முழுப் பாடலும் நீக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது.
இதைக் கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதால், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து வழக்கை முடித்து வைத்தனர்.