சென்னை: கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள டியூட் திரைப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சரத்குமார், பிரதீப், மமிதா, இயக்குநர் கீர்த்தீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

மேடைக்கு வந்த சரத்குமாரிடம் தொகுப்பாளர் பிரியங்கா “ரசிகர்களை கட்டிப்பிடியுங்கள், கிஸ் கொடுங்கள்” என்று கலகலப்பாக சொன்னார். அதற்கு “யாரை கட்டிப்பிடிக்கணும்?” என நகைச்சுவையாகக் கேட்ட சரத்குமார், “அனைவரையும் கட்டிப்பிடிக்கிறேன்!” என கூறி நிகழ்ச்சியை சிரிப்புடன் தொடங்கினார். அப்போது மேடையில் “ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்” என்ற பாடல் ஒலிக்க, “நயன்தாரா வரலையே!” எனச் சரத்குமார் கூறிய நொடியில் ரசிகர்கள் கைத்தட்டலால் அரங்கம் முழுவதும் கலகலப்பாக மாறியது.
தொடர்ந்து பேசிய சரத்குமார், “இந்தப் படத்தை தயாரித்த மைத்தி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது வாழ்த்துக்கள். இது அவர்களின் இரண்டாவது தமிழ் படம். பிரதீப் ரங்கநாதன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, எதிர்கால பிக் ஸ்டார். அவரின் உழைப்பும் நம்பிக்கையும் இந்தப் படத்தைக் கொண்டு செல்லும். கீர்த்தீஸ்வரன் இயக்கம் நிச்சயமாக புதிய அனுபவத்தை தரும்,” என்றார்.
மேலும் அவர், “என்னை இந்தப் படத்தில் அப்பாவாக நடிக்கச் சொன்னபோது ஆரம்பத்தில் நான் மறுத்தேன். ஆனால் கதையை கேட்ட பிறகு ஏற்றுக்கொண்டேன், ஏனெனில் இது புதுமையான கதாபாத்திரம். இப்படத்தில் நீங்கள் ஒரு புதிய சரத்குமாரை காண்பீர்கள். 17ஆம் தேதி திரையரங்கில் சென்று பாருங்கள், ஆனால் பார்த்த பிறகு விமர்சனங்களைக் கூற வேண்டாம் — ஒவ்வொருவருக்கும் தனித்தனி பார்வை இருக்கும்,” என சிரிப்புடன் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.