சென்னை: எம்ஜிஆருடன் சரோஜா தேவி நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றன.
எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னன் தொடங்கித் திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா, அன்பே வா உட்பட அவர் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றன. இதற்கு பிறகு இந்த கூட்டணி நாடோடி மன்னன் தொடங்கி 26 படங்களில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் கலை பொக்கிஷமாக மாறினார்கள்
சரோஜா தேவின் தமிழ்த் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பரிசென்றே கல்யாணப் பரிசு படத்தைக் கூறிவிடலாம். ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே பெரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் சரோஜாதேவி. சிவாஜி கணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என்று தொடங்கி ‘புதிய பறவை’யாகக் காதலித்து அவரைக் கைது செய்ய வரும் ரகசிய ஏஜெண்டாகப் பிரமாதப்படுத்தினார்.
படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜா தேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். சரோஜா தேவி திருமணத்துக்குப் பிறகும் கணவர் பி.கே. ஸ்ரீ ஹர்ஷாவின் அனுமதியுடன் படங்களில் கதாநாயகியாக நடித்தார். திருமணம் செய்துகொண்டால் வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற மாயையை முதலில் உடைத்தெறிந்தவர்.