சென்னை: நடிகை சரோஜாதேவி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சரோஜாதேவி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவரை சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் ‘நாடோடி மன்னன்’ தான். நாடோடி மன்னன் படத்துக்கு பல தனிச்சிறப்புகள் உண்டு. நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.
இந்த படத்தில் முதல் கதாநாயகி பானுமதி. 2-வது கதாநாயகியாக சரோஜா தேவி. இந்த படத்தில் கதாநாயகியாக சரோஜா தேவியை நடிக்க வைக்க சில எதிர்ப்புகள் கிளம்பினாலும் எம்.ஜி.ஆர் அவரை கதாநாயகி ஆக்குவதில் உறுதியாக இருந்தார்.
தமிழ் சினிமாவில் முதல் வண்ண திரைப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. அதே நேரத்தில் பகுதி நேர முதல் வண்ண திரைப்படம் நாடோடி மன்னன்.
நாடோடி மன்னன் படம் முதல் பாதிக்கும் மேல் கருப்பு வெள்ளை திரைப்படம், பாதிக்கு பிறகு வண்ண திரைப்படமாக வெளியானது. இந்த படம் சரோஜா தேவியின் அறிமுக காட்சியுடன் வண்ணத்திரைப் படமாக ஆரம்பமாகும். ‘கண்ணில் வந்த மின்னல் போல் காணுதே’ என்ற பாடல் காட்சியுடன் சரோஜா தேவி அறிமுகமாவார். தண்ணீருக்கு அடியில் நின்ற படி எம்.ஜி.ஆர், சரோஜா தேவி பாடும் வகையில் இந்த பாடல் காட்சி அமைந்திருக்கும்.
சரோஜா தேவி அறிமுகமான இந்த பாடல் காட்சி பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களால் கை தட்டி விசில் அடித்து கொண்டாடப்பட்டது. அதன் பிறகு சரோஜா தேவி தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகி ஆனார்.