இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ப்ரீடம் திரைப்படம், ஏற்கனவே ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குமுன், பத்திரிகையாளர் முன்னோட்ட காட்சி நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக, நேற்று படம் வெளியிடப்படவில்லை.

இன்று ஜூலை 11ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் ஒரு முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படம் சுற்றி தற்போது சில பிரச்சனைகள் தொடர்ந்து நிலவுவதால், படத்தின் வெளியீடு இன்னும் நடைபெறாமல் உள்ளது. தற்போது வெளியான அப்டேட்ஸ் படி, புதிய ரிலீஸ் தேதியை இன்னும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.
ப்ரீடம் திரைப்படம், ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் அகதிகளாக இருந்த ஈழத்தமிழர்கள் மீது நடந்த சித்ரவதை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ராமேஸ்வரம் பகுதியில் வசித்த அந்த அகதிகள், விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீண்ட காலம் அங்கே தடுக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தப்பிக்க முயற்சித்த பின்னணியில் பல்வேறு உண்மைகள் விரிகின்றன. இப்படத்தின் இக்கருத்து சமூக ஊடகங்களில் விவாதத்துக்கு இடமளித்துள்ளது.
இந்த உண்மைச் சம்பவத்தை படமாக்கியதற்காக இயக்குநர் சத்யசிவாவிற்கு சமூக வட்டாரங்களின் பாராட்டும், எதிர்ப்பும் ஒரே நேரத்தில் வந்துள்ளன. தமிழக அரசியல்வாதிகளும் இதில் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக திருமாவளவன், இப்படத்தை பாராட்டியுள்ளார். இருப்பினும், தற்போதைய சூழலில் இந்த படம் எதிர்பார்த்தபடி வெளியாவதற்கான பாதை இன்னும் சரியாகவில்லை என்பது தான் உண்மை.