சென்னை: பாடகி தீ மற்றும் ஏஆர் ரஹ்மான் இருவரையும் மென்சன் செய்து முத்தமழை பாடலை பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் இணையத்தில் அதிக அளவில் ட்ரெண்டானது. அதிலும், ஆடியோ லான்ச்சில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் வீடியோ இன்றளவும் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. பல ரசிகர்கள் தீ வெர்சனா? சின்மயி வெர்சனா? எது சிறந்தது என்ற விவாதத்தை சமூகவலைதளங்களில் நிகழ்த்தும் அளவு முத்தமழை பாடல் இரண்டு வெர்சனிலும் எல்லோரையும் கட்டிப்போட்டது.
சமீபத்தில் சின்மயி பாடிய முத்தமழை பாடலை இயக்குநர் வெங்கட் பிரபு ‘சொல்ல வார்த்தையே இல்லை’ என பாராட்டியிருந்தார். இந்த நிலையில் தற்போது பாடகி தீ மற்றும் ஏஆர் ரஹ்மான் இருவரையும் மென்சன் செய்து முத்தமழை பாடலை பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
முத்தமழை பாடலை சின்மயி மற்றும் தீ இருவரின் குரலிலும் கேட்ட ரசிகர்கள், சின்மயி பாடியது இதயத்தை வருடுகிறது, தீ பாடியது இதயம் முழுவதும் வலியை கடத்துகிறது என பாராட்டிவருகின்றனர்.
இந்த சூழலில் தற்போது முத்தமழை பாடலையும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் பாராட்டி பேசியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் – உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் – நம் A.R. ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்” என பாராட்டி எழுதியுள்ளார்.