சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி, தற்போது சினிமாவில் தனது பயணத்தை வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த இவர், தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்ட அவர், ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்தார். அந்த வாய்ப்பின் பிறகு, சினிமாவில் தொடர்ந்து புதிய கதாபாத்திரங்களை ஏற்று வருகிறார்.

ஜனனிக்கு முதல் பெரிய வாய்ப்பு விஜய்யுடன் நடித்த லியோ படத்தின் மூலம் கிடைத்தது. அந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் இருந்தாலும், அவர் வெளிப்படுத்திய நடிப்பு பலரிடமும் பாராட்டைப் பெற்றது. அதைத்தொடர்ந்து உசுரே படத்தில் ஹீரோயினாக நடித்த ஜனனி, கலவையான விமர்சனங்களை சந்தித்தார். இருந்தாலும், தனது இடத்தை நிலைநிறுத்தும் நோக்கில் தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இப்போது ஏ.கே. குமார் இயக்கும் நிழல் படத்தில் ஜனனி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பச்சை நிற உடையில், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் நிற்கும் ஜனனி, மருத்துவத் துறையை ஒட்டிய ஒரு கதாபாத்திரத்தில் இருப்பதை காட்டுகிறது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நிழல் படத்தில், ஜனனியுடன் விசான் மற்றும் பாக்கியலட்சுமி தொடரின் ஆர்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது ஜனனிக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு வெளியீட்டுக்கான அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரசிகர்கள், பிக் பாஸ் ஜனனியின் இந்த புதிய முயற்சியை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.