முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1975-ல் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘எமர்ஜென்சி’. இதில் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். இந்தப் படம் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரிப்பதாகவும், வரலாற்று உண்மைகளை திரித்து இருப்பதாகவும் கூறி இந்தியாவில் உள்ள சீக்கிய அமைப்புகள் ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக படம் தணிக்கை செய்யப்பட்டு நீண்ட தாமதத்திற்கு பிறகு வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் வடமேற்கு லண்டன், வால்வர்ஹாம்ப்டன், பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது. சீக்கிய பத்திரிகையாளர்கள் சங்கம் உட்பட பல சீக்கிய அமைப்புகள் படத்தை இங்கு வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எமர்ஜென்சி படம் சீக்கியர்களுக்கு எதிரான படம் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாரோ வியூ திரையரங்கில் இங்கிலாந்து கன்சர்வேட்டிவ் எம்பி பாப் பிளாக்மேன் உட்பட பலர் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தியேட்டருக்குள் நுழைந்து, பார்வையாளர்களை மிரட்டி, படத்தை நிறுத்தினர். இது குறித்து எம்பி பாப் பிளாக்மேன் கூறும்போது, “எமர்ஜென்சி திரைப்படம் இந்திரா காந்தி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களையும் சித்தரிக்கிறது.
இந்த படம் மிகவும் சர்ச்சையானது. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் படத்தைப் பார்த்து தங்கள் கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது” என்றார். இங்கிலாந்தில் நடந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், “எமர்ஜென்சி படத்திற்கு எதிரான போராட்டம் குறித்து இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளிடம் எங்களது கவலையை தெரிவித்துள்ளோம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்திய விரோத சக்திகள் மீது இங்கிலாந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.